Monday, March 30, 2009

33.மைத்ரேயர் சாபம்

கானகத்தில் அவர்களைக்காண ரிஷிகளும்,மற்றவர்களும் வந்த வண்ணம் இருந்தனர்.அவர்களுக்கு எப்படி உணவு அளிப்பது என அறியா தருமார் சூரியனை நோக்கி முறையிட்டார்.உன் அட்சய பாத்திரம் கிடைத்தது.அதில் சிறிதளவு உணவை இட்டாலும் பெருகி...எத்தனை பேர் வந்தாலும் ...அனைவருக்கும் உணவு கிடைத்தது..எல்லோரும் உணவு அருந்திய பின் பாஞ்சாலி உணவு கொள்வாள்.பிறகு பாத்திரம் காலியாகி விடும்.அன்று உணவு பெறும் சக்தி அவ்வளவு தான்.மீண்டும் மறுனாள்தான்.இப்படியே வனவாசம் கழிய அருள் கிடைத்தது.

பான்டாவர்கள் காடு சென்றதும் திருதிராட்டினன் மனம் சஞ்சலம் அடைந்தது.குற்ற உணர்வு அவனை வறுத்தியது.விதுரரை அழைத்து மக்கள் மனநிலை எப்படி என் வினவினார்.

'மக்கள்'துயரால் வாடுகின்றனர் என்றும் அவர்களைத்திரும்ப அழித்துக்கொள்ளுதலே சிறந்தது என்றும் இல்லையேல் துரியோதனன் முதலானோர் அழிந்து போவார்கள்'என்றும் விதுரர் கூற..அதை திருதிராட்டிரன் ஏற்காது விதுரர் மீது சீறிப்பாய்ந்தான்.

என்னால் நாட்டைவிட்டு துரத்தப்பட்ட பாண்டவர்களிடத்தில் தான் உனது உள்ளம் இருக்கிறது நீயும் அவர்களிடத்தில் சென்று தங்கு ..இனி அரண்மணையில் இருக்கவேண்டாம்' என்றார்.

விதுரர் உடன் வனத்திற்குச்சென்று பாண்டவர்களுடன் சேர்ந்திருந்தார்.செய்தி அறிந்த பீஷ்மர் திருதிராட்டிரனிடம் சென்று ' விதுரரை நீ காட்டுக்கு அனுப்பவில்லை..அறத்தை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டாய்...இனி அஸ்தினாபுரத்தில் இருல் சூழும்'என்றார்.

திருதிராட்டினன் மீண்டும் நாட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு அனுப்ப.. விதுரர் திரும்பினார்.
விதுரர் காடு சென்று திரும்பியது அறிந்த துரியோதனன்..அவர்கள் ஏதோ சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக எண்ணி..திருதிராட்டினிடம் சென்று'பாண்டவர்கள் இங்கு திரும்பி வந்தால்..நான் தற்கொலை செய்துகொள்வேன்'என்றான்.

அப்போது வியாசர் தோன்றி ...திருதிராட்டிரனிடம் 'துரியொதனனின் தீய செயல்களை தடுத்து நிறுத்தாவிடின் பேரழிவு ஏற்படும் என எச்சரித்து மறைந்தார்.

மைத்ரேய மாமுனிவர் காட்டில் சந்தித்தார்.சூதாட்டத்தில் தான் இந்த விலை என உணர்ந்தார்.பீஷ்மர்,விதுரர்,துரோணர்,கிருபர் ஆகியோர் இருந்தும் இந்த கொடுமை எப்படி நேர்ந்தது என வியந்தார்.மனம் வருந்தினார்.நாடு சென்று துரியோதனனை சந்தித்து அவனை வன்மையாகக் கண்டித்தார்.ஆனால் துரியோதனனோ அவரை எதிர்த்து பேசினான்...கோபமுற்ற முனி..'பீமனால் மாண்டு தரையில் கிடப்பாய்..இது உறுதி'என்றார்.

துவாரகையில் கண்ணனுக்கு வனம் சென்ற செய்தி எட்டியது.அவர் காட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார்.

'பகைவரிடம் க்ஷத்திரியர் இப்படி அடங்கிக்கிடப்பதா...அவர்களிடம் மோதி அழித்திடவேண்டாமா'என சகோதரர்கள் எண்ணினர்.திரௌபதியும் இக்கருத்தைக்கொண்டிருந்தாள்.ஆனால் தருமர்..தாம் கொண்ட கொள்கையில் இருந்த மாறுபட விரும்பவில்லை.'உயிர் போவதாய் இருந்தாலும் ..சத்தியத்திலிருந்து பிறழப்போவதில்லை .பெரியப்பாவின் கட்டளையை 13 ஆண்டுகள் நிறைவேற்றியே தீரவேண்டும்.'என தம்பியரிடம் உறுதியாகக்கூறினார்.நிபந்தனைக்குறிய காலம் முடிந்தபின் என்ன செய்வது எனத்தீர்மானிப்போம்'என அவர்களை அமைதிப்படுத்தினார்

Sunday, March 29, 2009

32- வனவாசம் கிளம்புதல்

பீமன் எழுந்தான். 'விண்ணவர் மேல் ஆணை..பராசக்தி ஆணை..கண்ணன் மேல் ஆணை..எங்கள் மனைவி திரௌபதியை...தொடை மீது உட்கார் என்று கூறிய துரியோதனனை போர்க்களத்தில் தொடையைப் பிளந்து உயிர் மாப்பேன். சேலை பிடித்து இழுத்த துச்சாதனனின் தோள்களைப் பிளப்பேன்' என்று சபதம் செய்தான்.

அர்ச்சுனன் எழுந்து 'பாஞ்சாலியின் சேலையை அகற்றச் சொன்ன கர்ணனை போரில் மடிப்பேன்..இது கண்ணன் மீதும்...திரௌபதி மீதும் ..காண்டீபம் என்னும் என் வில் மீதும் ஆணை' என்று சபதம் செய்தான்.

பாரதப்போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொல்வேன் என்றான் நகுலன்.

சகுனியின் தலையை துண்டிப்பேன் என்றான் சகாதேவன்.

பாஞ்சாலியோ...துச்சாதனன், துரியோதனன் இவர்கள் ரத்தத்தை கூந்தலில் தடவி குளித்து பின்னரே கூந்தல் முடிப்பேன்..என்றாள்.

அவளது சூளுரையைக் கேட்டு ..விண்ணகம் மலர் மாரி பொழிந்தது.மண்னகம் அதிர்ந்தது. திருதிராட்டிரன் நடுங்கினான்.

பின்..திருதிராட்டிரன் துரியோதனனையும், துச்சாதனனையும் கண்டித்தான்.பின் திரௌபதியிடம் வேண்டும் வரம் தருவதாகக் கூறினான்.

தருமரையும்...எனைய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்றாள் திரௌபதி.

சரி என்று அவர்களை விடுவித்த திருதிராட்டிரன்..நடந்தவற்றை கெட்டக் கனவாகக் கருதி மறந்துவிடச் சொன்னான்.இந்திரப்பிரஸ்தத்தைப் பாண்டவர்களுக்கு திருப்பி அளித்தான்.அனைவரும் இந்திரப்பிரஸ்தம் திரும்பினர்.

துரியோதனன் தந்தையின் முடிவுக் கண்டு அதிர்ச்சியுற்றான். 'எப்படியும் பாண்டவர்கள்..தங்களை பலப்படுத்திக் கொண்டு நம்மை அழிப்பர்..ஆதலால் அவர்களை மீண்டும் சூதாட அழைக்க வேண்டும்' என திருதிராட்டிரனிடம் புலம்பினான்.

அவன் கூற்றில் உண்மை இருக்கக்கூடும் என எண்ணிய..திருதிராட்டிரன்...பாண்டவர்களை மீண்டும் சூதாட அழைக்க ஒப்புக் கொண்டான்.

துரியோதனன் ..பாண்டவர்களிடம் சென்று..இதைத் தெரிவித்து...தருமரை மீண்டும் சூதாட ஒப்புக் கொள்ளவைத்தான்.

விதி...இது விதியின் செயல் என்றுதான் கூற வேண்டும்.

துரியோதனன் இம்முறை ஒரு சூழ்ச்சி செய்தான். 'சூதாட்டத்தில் தோற்பவர்..துறவு பூண்டு 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும்.ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் (மறைந்து வாழுதல்) செய்ய வேண்டும்' என்றும்..'இந் நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே தோற்றவர்க்கு நாடு திருப்பி அளிக்கப் படும்' என்றும், நிபந்தனை தவறினால் மீண்டும் 13 ஆண்டுகள் இதே முறையில் செல்ல வேண்டும்' என்றும் கூறினான்.

இம்முறையும் சகுனி வெல்ல..நாடு, நகரங்களை இழந்த பாண்டவர்கள்..பீஷ்மர் முதலியவர்களிடம் விடைபெற்று காடு செல்ல தீர்மானித்தனர்.வயதாகி விட்டதால் குந்தி விதுரர் வீட்டில் தங்கினாள்.

பாண்டவர் வனவாச சேதி அறிந்து..அஸ்தினாபுர மக்கள் அழுது..துடித்தனர்..அவர்களுடன் காடு செல்லவும் முயன்றனர்.தருமர் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.

(சபா பருவம் முற்றும்...இனி அடுத்து வனபருவம்)

Friday, March 27, 2009

31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.

அர்ச்சுனனின் பேச்சைக்கேட்டு பீமன் அமைதியானான்.அப்போது விகர்ணன் எழுந்து பேசலானான்..'திரௌபதிக்கு பீஷ்மர் கூறிய பதிலை நான் ஏற்கமாட்டேன்.பெண்களை விலங்குகள் போல கணவன்மார்கள் எதுவும் செய்யலாம்'என்றார் பீஷ்மர்.'நம் மூதாதையர் மனைவியை விற்றதுண்டோ? இதுவரை சூதாட்டத்தில் அரசியரை யாரும் இழந்ததில்லை.சூதாட்டத்தில் அடிமைகளைக் கூடப் பணயமாக வைத்து யாரும் இழந்ததில்லை.தன்னையே தருமர் சூதாட்டத்தில் இழந்து அடிமையான பின் வேறு உடமை ஏது..?திரௌபதிக்கு பாட்டனாரின் விடை பொருந்தாது'என்றான்.

விகர்ணனின் பேச்சைக் கேட்டு அவனுக்கு ஆதரவாக சில வேந்தர்கள் குரல் கொடுத்தனர்.'சகுனியின் கொடிய செயலை ஏற்றுக்கொள்ள முடியாது..ஒரு நாளும் உலகு இதை மறக்காது.செவ்வானம் படர்ந்தாற் போல் இரத்தம் பாயப் போர்களத்தில் பழி தீர்க்கப்படும் என்றனர்.

விகர்ணனின் சொல் கேட்டு கர்ணன் ஆத்திரமடைந்தான்..'அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறாய்.ஆற்றலற்றவனே..அழிவற்றவனே..இப்பெண்ணின் பேச்சால் தூண்டப்பட்டு ஏதோதோ பிதற்றுகிறாய்'என்றவன், ஒரு பணியாளனை நோக்கி..'அடிமைகள் மார்பிலே ஆடை உடுத்தும் வழக்கம் இல்லை.ஆதலால் பாண்டவர் மார்பில் உள்ள துணியை அகற்று! பாஞ்சாலியின் சேலையையும் அகற்று' என்றான்.

அப்பணியாள் தங்களை நெருங்குவதற்கு முன் பாண்டவர் தம் மாாபில் உள்ள ஆடையை வீசி எறிந்தனர்.பாஞ்சாலியோ செய்வது அறியாது மயங்கினாள்.

அந்நிலையில் துச்சாதனன்..பாஞ்சாலியின் துகிலை உரியலுற்றான்..பாஞ்சாலி கண்ணனை நினத்து ..இருகரம் கூப்பி தொழுதாள்.'கண்ணா..அபயம் ..அபயம்..என்றாள்.உலக நினைவிலிருந்து விலகித் தெய்வ நினைவில் ஆழ்ந்தாள்.

அன்று..முதலையிடம் சிக்கிய யானைக்கு அருள் புரிந்தாய்.

காளிங்கன் தலை மிசை நடம் புரிந்தாய்.

கண்ணா..உன்னை நம்பி நின் அடி தொழுதேன்..என் மானத்தை காத்து அருள்புரி..உன்னை சரண் அடைந்தேன் என்றாள்.

கண்ணபிரான் அருள் கிடைத்து ..துச்சாதனன் துகில் உரிய உரிய சேலை வளர்ந்து கொண்டே இருந்தது.


ஒரு நிலையில் துச்சாதனன் மயங்கி கீழே விழுந்தான்.

'தீங்கு தடுக்கும் நிலையில் இல்லை' என்று முன்னர் உரைத்த பீஷ்மர் எழுந்து கை தொழுது வணங்கினார்...

துரியோதனன் தலை கவிழ்ந்தான்.

Tuesday, March 24, 2009

30-பீஷ்மர் உரை....திரௌபதி மறுப்பு

பீஷ்மர் எழுந்து திரௌபதிக்கு கூற ஆரம்பித்தார்.'தருமன் சூதாட்டத்தில் உன்னை இழந்து விட்டான்..நீயோ அவன் செய்கையை மறுக்கின்றாய்..சூதிலே சகுனி தருமனை வென்றான்.பின் உன்னை பந்தயமாக்கி தருமன் இழந்தான்.அப்படி தருமன் தன்னை இழந்தபின் உன்னை வைத்து ஆடியது குற்றம் என்கிறாய்.விதிப்படி அது நியாயம்.ஆனால் பழைய காலத்தில் ஆணுக்குப் பெண் நிகரானவள் என்றே கருதினர்..ஆனால் பிற்காலத்தில் அக்கருத்து மாறிவிட்டது.

'இப்போதுள்ள நீதி சாஸ்திரங்களை நோக்குகையில் ..ஆணுக்கு இணையாகப் பெண்ணை கருதமுடியாது.ஒருவன் தன் தாரத்தை தானம் என வழங்கிடலாம்.தருமன் தன்னை அடிமை என விற்ற பின்னும் உன்னை பிறர்க்கு அடிமையாக்க உரிமையுண்டு.சாத்திரத்தில் சான்று உள்ளது..ஆனால் உண்மையில் இது அநீதி தான் .ஆனாலும் நீதி சாத்திரத்தில் இதற்கு இடமிருக்கிறது.உன் சார்பில் சாத்திரம் இல்லை.தையலே..முறையோ என நீ முறையிட்டதால் ..இதனை நான் சொன்னேன்..இன்று தீங்கை தடுக்கும் திறமில்லாதவனாக இருக்கிறேன்'என்று கூறி தலை கவிழ்ந்தார்.

'பிதாமகரே தர்ம நெறியை நன்கு உரைத்தீர்.ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்தபின் ..சான்றோர் நிறைந்த சபையில் அச்செய்தியைக் கூறியபோது ..'நீ செய்தது சரி என்றனராம்.அதைப்போலவே இருக்கிறது இந்த அவை.பேய் ஆட்சி செய்தால்,பிணத்தைத் தின்பதை போற்றும் சாத்திரங்கள்.

என் கணவரை சூதாட வற்புறுத்தியது தவறல்லவா.அது நேர்மையா..திட்டமிட்ட சதி அல்லவா..மண்டபம் ஒன்று அமைத்து அதைக்காண அழைத்து..நாட்டைக்கவர நினைப்பது முறையா? பெண்களுடன் பிறந்த உங்கள் செய்கை பெண்பாவம் அல்லவா' என்று கையெடுத்து கும்பிட்டு அழுது துடித்தாள் பாஞ்சாலி.

அழும் பாஞ்சாலியை நோக்கி,துச்சாதனன் தகாதா வார்த்தைகளை உரைத்தான்.அவள் ஆடை குலைய நின்றாள்.துச்சாதனன் அவள் குழல் பற்றி இழுத்தான்.

இது கண்டு பீமன் கோபம் அடைந்தான்.தருமரை நோக்கி'அண்ணா..மாதர்குல விளக்கை ஆடி இழந்துவிட்டாய்.தருமத்தை கொன்றுவிட்டாய்.சக்கரவர்த்தி என்ற மேலான நிலை பெற்ற நம்மை ..ஒரு கணத்தில் தொலைத்துவிட்டாய்.துருபதன் மகளையும் ..அடிமையாக்கினாய்..'என்று கனல் கக்க பேசி..தம்பி சகாதேவா
'எரி தழல் கொண்டுவா-அண்ணன்
கையை எரித்திடுவோம்' என்றான்.

பீமன் உரையை மறுத்தான் பார்த்தன்..'சினம் என்னும் தீ உன்அறிவை சுட்டெரிக்கிறது.

'தருமத்தின் வாழ்வுதனைஸ் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்..'என்றும்
கட்டுண்டோம்..பொறுத்திருப்போம்.காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்'
என்றும் பீமனிடம் கூறினான் பார்த்தன்.

Monday, March 23, 2009

29-திரௌபதி நீதி கேட்டல்

தீய எண்ணத்தில் அண்ணனை விஞ்சிய துச்சாதனன் பாஞ்சாலி இருக்குமிடம் நோக்கி விரைந்தான்.பாஞ்சாலி அவனைக்கண்டு ஒதுங்க...'அடீ..எங்கே செல்கிறாய்?'என கூச்சலிட்டான்..

திரௌபதியும் 'நான் பாண்டவர் மனைவி.துருபதன் மகள்..இதுவரை யாரும் இதனை மறந்ததில்லை...ஆனால்..தம்பி...நீயோ வரம்பின்றி பேசுகிறாய்'என்றாள்.

அதற்கு துச்சாதனன்..'இனி நீ பாண்டவர் தேவியும் அல்ல...பாஞ்சாலத்தான் மகளும் அல்ல,என் அண்ணனின் அடிமை.மன்னர் நிறைந்த அவையில் எங்கள் மாமனுடன் சூதாடி உன்னை தருமன் இழந்துட்டான்.இனி உன்னை ஆள்பவன் துரியோதனனே..அம்மன்னன்..உன்னை அழைத்து வருமாறு சொல்ல வந்தேன்...பேடி மகனான பாகனிடம் உரைத்தது போல என்னிடமும் சொல்லாது புறப்படு'என்றான்.

அவன் சொல் கேட்ட பாஞ்சாலி 'மாதவிலக்கு ஆதலால் ஒராடையுடன் இருக்கிறேன்.மன்னர் அவைக்கு என்னை அழைத்தல் முறையல்ல.மேலும் உடன்பிறந்தார் மனைவியை சூதில் வசமாக்கி...ஆதரவை நீக்கி...அருமையை குலைத்திடுதல் மன்னர் குல மரபா? உன் அண்ணனிடம் என் நிலையைஸ் சொல்' என்றாள்.

இதுகேட்ட துச்சாதனன்..கோபம் தலைக்கேற..பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றி இழுத்தான்.'ஐயோ' என அவள் அலற...அந்தக் கருங்கூந்தலை கரம் பற்றி இழுத்துச்சென்றான்.

வழிநெடுக மக்கள் வாய் மூடிப் பார்த்திருந்தனர்.

அவைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலி விம்மி அழுதாள்.பாண்டவரை நோக்கி 'அம்மி மிதித்து..அருந்ததி காட்டி வேதஸ் சுடர்த்தீ முன் விரும்பி மணம் செய்து கொண்டீரே..இன்று இதைப்பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே..இது தகுமா ' என்றாள்.

பார்த்தனும்..பீமனும்..செயலற்று இருந்தனர். தருமர் தலை குனிந்தார். .பாஞ்சாலி மேலும் கூறுகிறாள் 'இப்பேரவையில் சான்றோர் பலர் இருக்கின்றன்ர்.வேத விற்பன்னர்கள் உள்ளனர்.வேறுபல சிறப்புமிக்க மேலோர் உள்ளனர். ஆயினும் வெஞ்சினம் கொண்டு யாரும் வாய்திறக்கவில்லையே' என்றவள் துச்சாதனனை நோக்கி ;அற்ப புத்தியுடையவனே...மன்னர் அவையில் என்னை பிடித்து இழுத்து ஏசுகிறாயே..உன்னைப்பர்த்து 'நிறுத்துடா'எனக்கூற அவையில் யாரும் இல்லையே' என புலம்பினாள்.

வெறிகொண்ட துச்சாதனனோ..'நீ இப்போது வெறும் தாதி' என தீதுரைகள் பல சொன்னான்.

கர்ணன் சிரிக்க
துரியோதனன் ஆணவசிரிப்பு சிரிக்க
சகுனி மனம் மகிழ..அவையினரோ
வாளாயிருக்க...
பிதாமகன் பீஷ்மரோ
எழுந்து பேச ஆரம்பித்தார்.

Wednesday, March 18, 2009

28.திரௌபதி அவைக்கு வர மறுத்தல்

தேர்ப்பாகன் பாஞ்சாலி வாழ் இடத்திற்குச்சென்றான்... அவளிடம்...'அம்மா..தருமர்...மாமன் சகுனியிடம் மாயச்சூதாடி பொருளைஎல்லாம் இழ்ந்து ..நாட்டையிழந்து..தம்பியரை இழந்து,பந்தைய பொருளாக வைத்து தம்மையும் இழந்தார்.தாயே! உன்னையும் பணயம் வைத்து தோற்றார்.எல்லோரும் கூடியிருக்கும் அவைக்கு உன்னை அழைத்து வருமாறு எம் அரசன் என்னை பணித்தான்'என்றான்.

தேர்பாகன் கூறிய வார்த்தைகளைகேட்ட பாஞ்சாலி..'சூதர் சபையில் மறக்குலத்து மாதர் வருதல் மரபோ..?யார் கட்டளையால் என்னை அழைத்தாய்..'என்றாள்,

அதற்கு அவன்,'துரியோதன மன்னன் கட்டளை'என்றான்.

'நீ சென்று நடந்ததை என்ன என்று கேட்டு வா சகுனியிடம்.. சூதாடியபோது ...தர்மர்..என்னை முன்னே கூறி இழந்தாரா? அல்லது தம்மையே முன்னம் இழந்து பின் என்னைத் தோற்றாரா?இச்செய்தி தெரிந்து வா'என்று திரௌபதி தேர்பாகனை திருப்பி அனுப்பினாள்.

தேர்ப்பாகனும் சபை சென்று 'அரசே..'என்னை முதலில் வைத்திழந்த பின்பு மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற பின்னர் எனைத்தோற்றாரா? என்று பேரவையில் கேட்டு வரச்சொல்லி அப்பொன்னரசி பணித்தாள்..அதன்படி இங்கு வந்துள்ளேன்' என்றான்.

இது கேட்டு பாண்டவர் மனம் நொந்தனர்.மற்ற மன்னர்களும் ஊமையராயினர்.

பாகன் உரைத்ததைக்கேட்டு துரியோதனன் சினத்தில் சீறினான்...'என் பெருமையை அறியா தேர்ப்பாகனே,,,அவள் சொன்னதை இங்கு வந்து உளறுகிறாய்..அந்தப் பாஞ்சாலி இங்கு வந்து பேசட்டும்...'என்றான்.

தேர்ப்பாகனும் ..மீண்டும் பாஞ்சாலியிடம் சென்றான்..ஆனால் திரௌபதியோ..'தர்மர் தன்னை இழந்த பின்னால்...என்னை இழந்திருந்தால்...அது தவறு...அதற்கு அவருக்கு உரிமையில்லை.....நீ மீண்டும் சென்று அதற்கான பதிலை அறிந்து வா என்றாள்.

வருத்தத்துடன் தேர்ப்பாகன் 'எனனைக்கொன்றாலும்...இதற்கான விளக்கம் தெரியாது.நான் திரும்ப இங்கே வரப்போவதில்லை'என உறுதி கொண்டான்.

துரியோதனனிடம் நடந்ததைக்கூறியதுடன்..பாஞ்சாலி மாதவிடாயிலிருக்கிறாள் என்ற செய்தியையும் சொன்னான்.

செய்தி கேட்ட துரியோதனன்'மீண்டும் போ...அவளை ஏழு கணத்தில் அழைத்துவா 'என்றான்.

தேர்ப்பாகன் தெளிவாக சபைக்குக்கூறினான்.'நான் இதுநாள்வரை மன்னன் கட்டளையை மீறியதில்லை...அம்மாதரசி கேட்ட கேள்விக்கு ஆறுதலாக ஒரு சொல் சொன்னால் சென்று அழைத்து வருகிறேன்'என்றான்.

பாகனின் மொழி கேட்ட் துரியோதனன் துச்சாதனனை நோக்கி...'இவன் பீமனைப்பார்த்து பயந்து விட்டான்..இவன் அச்சத்தை பிறகு போக்குகிறேன்..இப்போது நீ சென்று அவளை அழைத்து வா..'என ஆணையிட்டான்

Tuesday, March 17, 2009

27-சூதாட்டத்தில் அனைவரையும் இழத்தல்

ஆட்டம் தொடர்ந்தது.சகாதேவனைப் பணயம் வைத்தார் தருமர்.இழந்தார்.பின் நகுலனையும் இழந்தார்.

இருவரையும் இழந்ததும்..வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல 'நகுலனும்..சகாதேவனும்..வேறொரு தாய்க்கு பிறந்தவர்கள் என்பதால்..அவர்களை வைத்து ஆடினாய் போலும்..ஏன் பார்த்தனையும், பீமனையும் வைத்து ஆடவில்லை?' என சகுனி தருமனைத் தூண்டினான்.

'சூதாட்டத்தில் நாட்டை இழந்தாலும்...எங்கள் ஒற்றுமையை யாரும் குலைக்க முடியாது' என்ற தருமர்..அடுத்தடுத்து அர்ச்சுனனையும், பீமனையும் இழந்தார்.

துரியோதனனோ மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான்.சகுனி தருமரை நோக்கி..'வேறென்ன பந்தயப் பொருள்?' எனக் கேட்க..தருமரோ தம்மைத் தாம் பணயம் என்றார்.மீண்டும் சகுனி வென்றார்.

துரியோதனனின் மகிழ்ச்சியைக் கண்ட சகுனி தந்திரத்துடன்..அவனிடம்..'துரியோதனா..புண்ணை கோல் கொண்டு குத்தாதே...அவர்களே நொந்துப் போய் உள்ளனர்.இவர்கள் உன் சகோதரர்கள்.அவர்கள் நாணும் படி பேச வேண்டாம்.இவர்கள் வெற்றி பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது...கடைசியாக ஒரு பொருள் இவர்களிடம் இருக்கிறது.அதை வைத்து ஆடினால்...தோற்ற பொருள் அனைத்தும் மீண்டும் பெறலாம்..'என திரௌபதியை வைத்து ஆட தருமரைத் தூண்டினார்.

துரியோதனனும்...'இந்த யோசனை அருமை' என மகிழ்ந்தான்.

சிறிதும்..சிந்தனையின்றித் திரௌபதியை அந்த கொடியவர் அவைக்களத்தில் பணயமாக வைத்தார் தருமர்.

திரௌபதியும் சூதில் வீழ்ந்தாள்.கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஆணவத்துடன்..துரியோதனன்..விதுரரைப் பார்த்து..'திரௌபதியிடம் சென்று..நம் மனையில் பணி புரிய அழைத்து வருக' என கட்டளையிட்டான்.

விதுரர் சினம் கொண்டு 'மூடனே! பாண்டவர் நாளை பழி தீர்த்துடுவர். தரை மீது மாண்டு நீ கிடப்பாய். தனக்குத்தானே அழிவைத் தேடுவதுதான் ஆண்மையா? நொந்தவர் மனம் வருந்த சொல்லும் சொல்..அவர் நெஞ்சில் நீண்ட நாட்கள் அகலாது..அது நம்மை நரகத்தில் சேர்த்துவிடும். உன் நன்மைக்கே இதைச் சொல்கிறேன்' என்றார். 'கௌரவர்களே! பேராசை கொண்டு பிழைகள் பல செய்கி
றீர்.பாண்டவர் பாதம் பணிந்து..அவர்கள் இழந்ததை அவரிடமே கொடுத்து விடுங்கள்.இதனை நீங்கள் மேற்கொள்ளவில்லையெனில் மகாபாரதப்போர் வரும்..நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்" என்றும் கூறினார்.

விதுரர் சொல் கேட்டு துரியோதனன் 'ஏப்போதும் எம்மை சபித்தல் உம் இயல்பு.' என்று கூறிவிட்டு...தேர்ப்பாகனை கூப்பிட்டு..'நீ பாஞ்சாலி இருக்குமிடம் சென்று, எமது ஆணையைக் கூறி..அவளை இங்கு அழைத்து வா..' என்றான்.

Thursday, March 12, 2009

26.- விதுரரின் அறிவுரை

சூதாட்டத்தை நிறுத்த விதுரர் எவ்வளவோ முயன்றார்.'சந்தர குலத்திலே பிறந்த நாமா இந்த தீய செயலைச் செய்வது..இன்று பாண்டவர் பொறுமை காக்கின்றனர்..குலம் அழிவெய்த விதி துரியோதனனைப் படைத்துள்ளது.குலம் முழுவதும் துரியோதனன் என்னும் மூடனுக்காக அழிய வேண்டுமா? என்றவர் திருதிராட்டிரனை நோக்கி 'சூதாட்டத்தில் துரியோதனன் வெற்றிக்கண்டு மகிழ்கிறாய்.கற்ற கல்வியும்..கேள்வியும் கடலிற் காயம் கரைத்தது போல் ஆயிற்றே..வீட்டுக்குள்ளேயே நரியையும் விஷப்பாம்பையும் பிள்ளைகளாய் வளர்த்திட்டோம்.சாகும் வயதில் தம்பி மக்கள் பொருளை விரும்புகிறாயா..'நாட்டைத் தா' எனக் கேட்டிருந்தால் தந்திருப்பார்களே..அப்படியிருக்க சூதாட்டத்தை நிறுத்துவாயாக'என வேண்டினார்.

விதுரரின் கூற்றைக்கேட்டு துரியோதனன் நெஞ்சம் கொதித்தது.
கண்களில் தீப்பொறி
புருவங்கள் துடித்தன
சினத்தின் விளிம்புக்கே சென்றான்.
நன்றி கெட்ட விதுரா..நாணயமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே..நாசம் தேடும் விதுரா..
எங்கள் அழிவைத்தேடும் நீ..இன்பம் எங்கு உண்டோ..அங்கே செல்'என்று விதுரரை ஏசினான்.

ஆனால் விதுரரோ சிறிதும் குழம்பாமல் தெளிவாகக்கூறினார்...'நான் எங்கு சென்றாலென்ன...அழிவுப்பாதையிலிருந்து உன்னைத்தடுக்கப்பார்த்தேன்.ஆனால் பொல்லாத விதி என்னை வென்றுவிட்டது...என் அறிவுரை எடுபடாது உன்னிடம்..நெடும் பச்சை மரம் போல வளர்ந்து விட்டாய்...இங்கு யாரும் உனக்கு அறிவுரை கூறார்..உன் அவையில் நல்லோர் இருப்பது தகாது...உன் இஷ்டம் போல் செய்'என்று கூறி இருக்கையில் அமர்ந்தார்.

இது வேளை சகுனி..'நீ இழப்பதெல்லாம் மீண்டும் வரும்..காயுருட்டலாமா,,?என்றார்.
தருமர் நிலை தடுமாற..'நாட்டை இழந்த நீ இனி என்ன இருக்கிறது என எண்ணாதே..உன் தம்பிகளை பணயமாக வைத்து இழந்தது அனைத்தையும் மீட்டுக்கொள்;என்றான் சகுனி.

அவையோர் கண்ணீர்விட்டனர்.கர்ணன் மகிழ்ந்தான்,துரியோதனனோ..'தம்பிமாரைவைத்து நீ ஆடி வென்றிடின்..இழந்த பொருட்களை மீண்டுமளிப்போம்..'என்றான்.

.பீமன் அடிபட்ட நாகம் போலக் காணப்பட்டான்...பார்த்தன் முகக்களையிழந்தான்.நகுலனோ நினைவிழந்தான்.முற்றுணர்ந்த சகாதேவன் ஊமையானான்.பீஷ்மர் நெருப்பில் வீ ழ்ந்தாற்போல்துடித்தார்.விதுரர் பெரும் துன்பமுற்றார்.

Monday, March 9, 2009

25-சூதாட்டம் தொடங்கியது

தம்பிகள் கோபம் தணிந்து ..தருமரின் அறிவுரைப்படி அனைவரும் அஸ்தினாபுரம் அடைந்தனர்.அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களைக் காண..சந்திகள்,வீதிகள்,சாலைகள் என எத்திசை
நோக்கினும் மக்கள் சூழ்ந்தனர்.

அவர்கள் அரண்மனை அடைந்து திருதிராட்டினனையும்,பீஷ்மரையும்,கிருபாசாரியாரையும்,துரோணாசாரியாரையும் அவர் மகன் அசுவத்தாமனனையும் கர்ணனையும்,துரியோதனனையும் உள்ளன்போடு வாழ்த்தி வணங்கினர்.மாயச்சகுனியை மகிழ்வுடன் தழுவினர்...குந்தியும்,திரௌபதியும் அனைவருடனும் அளவளாவினர்.

அவை கூடியது..அப்போது சகுனி தருமரை நோக்கி.. 'தருமரே....உமது குலப்பெருமையை உயர்த்தியுள்ளீர்..இப்போது சூதாட்டத்தில் உங்கள் ஆற்றலைக் காண்போமா?' என்றார்.

தருமரோ...'சதி செய்து என்னை சூதுக்கு அழைத்தீர்..இதில் பெருமையுண்டா..? அறம் உண்டா? வீரம் உண்டா? எங்கள் நல்வாழ்வை நீ விரும்பவில்லை என நான் அறிவேன்.இச்சூதாட்டம் மூலம் எங்களை அழிக்க நினைக்கிறாய்' என்றார்.

உடன் சகுனி சிரித்தான். 'உன்னை மாமன்னன் என்று அழைத்து விட்டேன்.பண்டை மன்னர்கள் சூதாடவில்லையா...அச்சம் கொள்ளாதே...நீ சூதாட்டத்தில் வெல்வாய்..வெற்றி பெறுவது உன் இயல்பு..வா ஆடுவோம்..'என்றான்.

தருமர் பதிலுக்கு ..'சான்றோர் சூதாட்டத்தை விஷம் என கண்டித்துள்ளனர்...ஆதலின் இந்த சூதினை வேண்டேன்...என்னை வஞ்சித்து..என் செல்வத்தைக்கொள்வோர் எனக்கு துன்பம் தருபவர் அல்லர்,,நான்கு வேதங்களையே அழித்தவர் ஆவர்...பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..வேண்டாம் சூது ...' என்றார்.

மன்னர் பலர் கூடியுள்ள இம்மாபெரும் சபையில் மறுத்து பேசுதல் அழகோ...வல்லவனே வெல்வான்..அல்லாதவன் தோற்றிடுவான்.வருவதானால் வா..மனத்துணிவில்லையெனில் செல்'என்றான் சகுனி..

விதியின் வலிமையை உணர்ந்த தருமர் ..'மதியினும் விதி பெரிது..பிறர் செய்யும் கர்மப்பயனும் நம்மை வந்து அடைவதுண்டு.ஆகவே விதி இச்செயலுக்கு என்னை தூண்டுமானால் அதைத்தடுக்க என்னால் முடியுமா?'என்று சூதுக்கு இணங்கினார்.

சூதாட்டம் தொடங்கியது.தாயம் உருட்டப்பட்டது.விதுரரைப்போன்றோர் மௌனியானார்.

'பந்தயம் என்ன?'என்றார் தருமர்.

'அளவிலா செல்வம் என்னிடம் உண்டு..ஒரு மடங்கு நீ வைத்தால் ஒன்பது மடங்கு நான் வைப்பேன்'என்றான் துரியோதனன்...

'ஒருவர் ஆடப் பணயம்' வேறொருவர் வைப்பதா..'என்றார் தருமர்.

'மாமன் ஆடப் பணயம்..மருமகன் வைக்கக்கூடாதா..?இதில் என்னததவறு..?'என எதிவாதம் புரிந்தான் சகுனி...

பரபரப்பான ஆட்டத்தில்...படிப்படியாக ஏராளமான பொருட்களை இழந்தார் தருமர்.

மாடிழந்தார் மந்தை மந்தையாக

ஆடிழந்தார்..

ஆளிழந்து விட்டார்..


நாடிழைக்கவில்லை தருமா..நாட்டை வைத்து ஆடு...என்று தூண்டினான் சகுனி

Wednesday, March 4, 2009

24- தருமபுத்திரர் முடிவு

துரியோதனன் பேச்சைக்கேட்டு திருதிராட்டினன் துயரத்துடன் சொன்னான்.. 'மகனே..உன் செயலை வீரர்கள் ஒரு போதும் செய்யார்.உலகில் பிறர் செல்வத்தைக்கவர விரும்புவோர் பதரினும்..பதராவர்.வஞ்சனையால் பிறர் பொருளைக் கவரக்கூடாது. இதெல்லாம் உனக்குத் தெரியவில்லை.பாண்டவரும் எனக்கு உயிராவர்.உன் எண்ணத்தை மாற்றிக்கொள்'

ஆனால்...துரியோதனன் மனம் மாறவில்லை..'வெற்றிதான் என் குறிக்கோள்..அது வரும் வழி நல்வழியா...தீய வழியா என்ற கவலை எனக்கில்லை.என் மாமன் சகுனி சூதாட்டத்தில் நாட்டைக் கவர்ந்து தருவான்...தந்தையே...நீ அவர்களை இங்கு அழைக்கவில்லையெனில்..என் உயிரை இங்கேயே போக்கிக்கொள்வேன்'என்றான்.

'விதி...மகனே..விதி..இதைத்தவிர வேறு என்ன சொல்ல...உன் கொள்கைப்படியே..பாண்டவர்களை அழைக்கிறேன்' என்றான் திருதிராட்டினன்.

தந்தையின் அனுமதி கிடைத்ததும்...துரியோதனன் ஒரு அற்புதமான மண்டபத்தை அமைத்தான்.

திருதிராட்டினன்...விதுரரை அழைத்து..'நீ பாண்டவர்களை சந்தித்து..துரியோதனன் அமைத்திடும்..மண்டபத்தைக் கண்டு களிக்க திரௌபதியுடன் வருமாறு..நான் அழைத்ததாக கூறுவாயாக..பேசும்போதே..சகுனியின் திட்டத்தையும்..குறிப்பால் உணர்த்துவாயாக' என்றான்.

விதுரரும்..துயரத்துடன் இந்திரபிரஸ்தம் சென்று பாண்டவரை சந்தித்து..'அஸ்தினாபுரத்தில்..துரியோதனன் அமைத்துள்ள மண்டபத்தைக் காண வருமாறு வேந்தன் அழைத்தான்.சகுனியின் யோசனைப்படி துரியோதனன் விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளான்..விருந்துக்குப்பின் ..சூதாடும் எண்ணமும் உண்டு..'என்றார்.

இதைக்கேட்டு தருமர் மனம் கலங்கினார்.'துரியோதனன் நமக்கு நன்மை நினைப்பவன் இல்லை.முன்பு எங்களை கொல்லக் கருதினான்.இப்போது சூதாட்டமா? இது தகாத செயலல்லவா? என்றார்.

துரியோதனனிடம்..சூதாட்டத்தின் தீமைப் பற்றி..எடுத்துக் கூறியும்..அவன் மாறவில்லை.திருதிராட்டினனும்..கூறினான்..பயனில்லை..என்றார் விதுரர்.

தருமரோ'தந்தை மண்டபம் காண அழைத்துள்ளார். சிறிய தந்தை நீங்கள் வந்து அழைத்துள்ளீர்கள்.எது நேரிடினும்..அங்கு செல்வதே முறையாகும்' என்றார்.

இதைக்கேட்ட ..பீமன்..அர்ச்சுனனை நோக்கி ' அந்தத் தந்தையும்...மகனும் செய்யும் சூழ்ச்சியை முறியடிப்போம்..அழிவு காலம் வரும் வரை ஒரு சிறிய கிருமியைக் கூட உலகில் யாரும் அழிக்க முடியாது.இப்போது அவர்களின் அழியும் காலம் வந்துவிட்டது.எனவே அவர்களுடன் போரிடுவோம்.அவர்கள் செய்யும் தீமையை எத்த்னைக் காலம்தான் பொறுப்பது? ' என்றான்.

விஜயனும்..மற்ற தம்பிகளும்..இது போலவே உரைக்க..தம்பியரின் மனநிலையை உணர்ந்த தருமர் புன்னகையுடன்..'முன்பு துரியோதனன் செய்ததும்..இன்று மூண்டிருக்கும் தீமையும்..நாளை நடக்க இருப்பதும் நான் அறிவேன்..சங்கிலித் தொடர் போல விதியின் வழியே இது.நம்மால் ஆவது ஒன்றுமில்லை...தந்தையின் கட்டளைப்படி..இராமபிரான் காட்டுக்கு சென்றது போல..நாமும் நம் தந்தையின் கட்டளைப்படி நடப்போம்' என்றார்.

Sunday, March 1, 2009

23 - சகுனியும்...துரியோதனனும்..

ராஜசூயயாகம் முடிந்தபின்.. துரியோதனன் பொறாமையால் மனம் புழங்கினான்.

பாண்டவர் ஆட்சியிருக்கும் வரை என் ஆட்சியும் ஒரு ஆட்சியா? அர்ச்சுனனின்..காண்டீபம் என்ற வில்லும், பீமனின் கதாயுதமும் என்னை இகழ்ச்சி ஆக்கிவிடும் போல இருக்கிறது.ராஜசூயயாகத்திற்கு..எவ்வளவு மன்னர்கள் வந்தனர்..எவ்வளவு பரிசுகளை கொண்டுவந்து கொட்டினார்கள்..அந்த தர்மனிடம்..அப்படி என்ன இருக்கிறது? என்று பொறாமைத் தீ கொழிந்துவிட்டு எரிய ஏங்கினான்.

பாண்டவர் வாழ்வை அழித்துவிட வேண்டும்..என தன் மாமனாகிய சகுனியை சரண் அடைந்தான்.

மாமனே! அவர்கள் செய்த யாகத்தை மறக்கமுடிய வில்லை.அங்கு வந்த பொருட்குவியலைப் பற்றிக்கூட எனக்கு கவலையில்லை.ஆனால்..அவ்வேள்வியில் என்னை கேலி செய்தனர்.எள்ளி நகையாடினர் ..என்றெல்லாம்..சொல்லி என் தந்தையை பொறாமை கொள்ளச் செய்..என்றான்.

உடன் சகுனி..'நீ ஒப்பற்ற தெய்வமண்டபம் ஒன்று செய்.அதன் அழகைக் காண பாண்டவரை அழைப்போம்.மெல்லப் பேசிக்கொண்டே..சூதாட்டம் ஆட..தர்மனை சம்மதிக்க வைப்போம்.என் சூதாட்டத்தின் திறமையை நீ அறிவாய்.அதன் மூலம் அவர்களை உனக்கு அடிமை ஆக்குவேன்' என்றான்.

இருவரும்..திருதிராட்டினனிடம் சென்று உரைத்தனர்.ஆனால் அவன் சம்மதிக்கவில்லை.ஆனால்..சகுனி சொல்கிறான்..

'உன் மகன் நன்கு சிந்திக்கிறான்..ஆனால் பேசும்போதுதான் தடுமாறுகிறான்.அவன் நீதியை இயல்பாகவே அறிந்துள்ளான்.அரச நீதியில் தலை சிறந்து விளங்குகிறான்.பிற மன்னர்களின்..செல்வமும்..புகழும் வளர்வதுதான் ஒரு மன்னனுக்கு ஆபத்து.அந்த பாண்டவர் வேள்வியில் நம்மை கேலி செய்தனர்.மாதரும் நகைத்திட்டாள்..சூரியன் இருக்கையில்.. மின்மினிப் பூச்சிகளைத் தொழுவது போல..ஆயிரம் பலம் கொண்ட உன் மகன் இருக்கையில்..அவனுக்கு வேள்வியில் முக்கியத்துவம் இல்லாமல்..கண்ணனுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.'

இதைக் கேட்ட திருதிராட்டினன்.."என் பிள்ளையை நாசம் செய்ய..சகுனியே..நீ பேயாய் வந்திருக்கிறாய்.சகோதரர்களிடையே பகை ஏன்?பாண்டவர்கள் இவன் செய்த பிழை எல்லாம் பொறுத்தனர்.பொறுமையாக உள்ளனர்..அவர்கள் இவனைப் பார்த்து சிரித்ததாக அற்பத்தனமாய் பேசுகிறாய்...துரியோதனன் தரை எது...தண்ணீர் எது..என தடுமாறியது கண்டு..நங்கை நகைத்தாள்.இது தவறா?..தவறி விழுபவரைக் கண்டு..நகைப்பது மனிதர்கள் மரபல்லவா? என்றான்.

துரியோதனன்..தன் தந்தையின் பேச்சைக் கேட்டு..கடும் சினம் கொண்டான்.இறுதியாக தந்தையிடம்..'நான் வாதாட விரும்பவில்லை.நீ ஒரு வார்த்தை சொல்லி பாண்டவர்களை இங்கு வரவழைப்பாயாக..ஒரு சூதாட்டத்தில்..அவர்கள் சொத்துக்களை..நாம் கவர்ந்து விடலாம்..இதுவே என் இறுதி முடிவு' என்றிட்டான்.